Wednesday, September 07, 2011

செல்வராஜ் மாஸ்டர் - II


ஆக, நான் கீபோட் வகுப்பு சேர்ந்தாகி விட்டது.வாரத்திற்கு இரண்டு-மூன்று வகுப்புகள் நடைபெறும். அன்றைய தினங்கள் காலை முதல் கடைசி மணி வரை என் நினைவெல்லாம் Casio SA-10 தான். பேருந்தில் செல்லும் போது கைப்பிடியிலும், வகுப்பில் அமர்ந்திருக்கும் போது மேசையிலும், நடந்து கொண்டிருக்கும் போது மனதுக்குள்ளும் வாசித்துக்கொண்டே இருப்பேன். I was completely overwhelmed. By the instrument, and the master.

கீபோட் கட்டைகள் அவர் விரல்களுக்கு சிறிதாகவே தெரியும். இருந்தும் அனாயாசமாக வாசிப்பார். கத்துக்குட்டிகளான எங்கள் விரலசைவில் தேவையற்ற அழுத்தம் இருக்கும். ஆனால் மாஸ்டரின் விரலசைவில் ஒரு வசீகரமான அலட்சியம் தெரியும். நினைத்த பாடலை நினைத்த நிமிடம் வாசிக்கும் வேகம் எங்கள் அனைவரையும் கவர்ந்தது. And he was a very friendly man. "கடிச்சு கொதறிபுடுவேன்" என்று எங்களை கண்டக்டர் அண்ணா மிரட்டும்போது, எங்களுக்கு ஆதரவாக இரண்டொரு நல்வார்த்தை பேசுவார், சிரிப்பார். பொடிப்பசங்கதானே என்று நினைக்க மாட்டார், நாங்கள் சொல்வதையும் கவனமாக கேட்பார். எங்கள் நேரு மாமா.

என்ன காரணமோ தெரியவில்லை, அவருக்கும் என்னை பிடித்து விட்டது. மற்றவர்களை விட என் மேல் அதிகமாக கவனம் செலுத்துவார். எனக்கு அதிக நேரம் சொல்லித்தருவார். கீபோட், ஹார்மோனியம் என்று மாற்றி மாற்றி எனக்கு பயிற்சி கொடுப்பார். Inexplicably, it looked like the respect was mutual!

நான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள, எனக்கு ஈடாக அவரும் மகிழ்ந்தார். நேரம் காலம் கண்டுகொள்ளாமல் எனக்கு பயிற்சி கொடுப்பார். ஞாயிற்றுகிழமைகளில் நான் அவர் வீட்டிற்க்குச் சென்று ஐந்து-ஆறு மணி நேரம் டேரா போட்டுவிடுவேன். சலிக்காமல் கற்றுத் தருவார். ம்யூசிக் கிளாஸ் இல்லாத வார நாட்களில் நேரமிருந்தால் அவரே என் வீட்டிற்கு வந்து கீபோட்-ஐ என் கையில் கொடுத்து விளையாடச் சொல்வார். அவர் பர்சனல் வேலையாக எங்காவது சென்றால், என்னையும் கூட அழைத்துச் செல்வார். அவரது லூனா-வில் நாங்கள் உக்கடம், சாய்பாபா காலனி, நூறடி ரோடு, RS புரம், என்று கூகிள் மேப்பில் பெரிதாகத் தெரியும் அனைத்து இடங்களுக்கும் சென்றதுண்டு. எங்கு சென்றாலும் சாப்பிட ஏதாவது வாங்கித் தருவார். "வீட்டில் டின் கட்டுவார்கள்" என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். பயத்துடன் சேர்த்து அவர் வாங்கித் தருவதையும் தின்று தீர்ப்பேன்.

எல்லாம் ஓரிரு மாதங்களுக்கு தான்.

அதன் பின், என் அப்பாவிற்கு மாற்றலாகி, நாங்கள் சென்னைக்கு சென்று விட்டோம்.

ஜிமெயில், ஆர்குட், பேஸ்புக் இல்லாத  காலங்கள்.

*~*~*~*~*~*~*~*~*~*~*


2002 - கோவையில் PSG-யில் சேர்ந்தேன். எனக்கு அந்த ஊரின் மேலிருந்த ஈர்ப்பிற்கு ஒரு காரணம் - செல்வராஜ் மாஸ்டர்.

முதல் செமஸ்டர் முடிந்த நாள்.
விடுதி வெறிச்சோடிக் கிடந்தது. ஈரோடு, மேட்டுபாளையம், சேலம், திருப்பூர் மக்கள் விடுமுறைக்கு பறந்திருந்தனர். சென்னை, நெல்லை போன்ற தூரப் பிரதேச மக்கள் மட்டும் இரவு வரை நேரம் கடத்திக் கொண்டிருந்தோம்.

"டேய்.. சாய்பாபா காலனி-ல ஒரு வேலை இருக்கு. கூட வர்றியா?" என்றான் லவா. கூட பல்குன் மற்றும் டெல்லி அருண்.

"எனக்கும் 8 வருஷ பெண்டிங் வேலை ஒண்ணு இருக்கு. வா போலாம்" என்று கிளம்பினேன்.

இரண்டு மூன்று பேருந்து மாறி சாய்பாபா காலனி சென்றடைந்தோம். ராஜா அண்ணாமலை ரோடு. அங்கப்பா பள்ளி தூரத்தில் தெரிந்தது.

"என்னாங்கடா இவ்ளோ மெதுவா நடக்குறீங்க. நா முன்னாடி போறேன்" என்று மற்றவர்களை விட்டுவிட்டு வேகமாக ஓடினேன்.

பள்ளியில் கடைசி மணி அடித்திருந்தது. அன்றைய தினத்தை வெற்றிகரமாக கடத்திய மகிழ்ச்சியில் குழந்தைகள் வெளியேறிக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு அருகில் சென்று பார்த்தபோது,  பரப்பளவு குறைந்தது போல் தெரிந்தது. கண நேர ஆச்சரியத்திற்கு பிறகு சிரித்து கொண்டேன். The wonders of relative magnitude. மாற்றத்தை ரசித்தேன்.

அப்பொழுது அங்கே நின்றுகொண்டு குழந்தைகளை வரிசை படுத்திக் கொண்டிருந்தார் ஒரு அம்மையார். எங்கள் PT மிஸ். அவர் ஒரு டெர்ரர். ஒற்றைச் சொல்லால் ஒட்டு மொத்த கும்பலையும் அமைதியாக்குவார். பழக்க தோஷத்தில் அவரைக் கண்டதும் மிரண்டுவிட்டேன். அப்பொழுது அவர் என்னைப் பார்த்தார். யாரையோ தேடி நான் வந்ததை புரிந்து கொண்டு, "சொல்லுங்க சார். யார் வேணும்?" என்றார். 

"சாரா? நானா? ஹா ஹா ஹா ஹா ஹா!!" என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். மாற்றத்தில் குதூகலித்தேன்.

அப்பாடக்கர் எண்ணத்தை அடக்கிக் கொண்டு, "பஸ் டிரைவர் செல்வராஜ் அண்ணா இருக்காரா? அவர பாக்க தான் வந்தேன்" என்றேன்.

"கேட் முன்னாடி பஸ் நிக்குது பாருங்க. வந்துருவார். இப்போ கெளம்புற நேரம் தான்." என்று எனக்கு வழிகாட்டினார் அந்த முன்னாள் டெரரிஸ்ட்.

எதிர்பாராமல் கிடைத்த மரியாதையின் மமதையில் லேசாக சிரித்துக்கொண்டே பேருந்தருகில் சென்று நின்றேன்.

"எட்டு வருஷம் ஆயிருச்சே.. ஆள் எப்டி மாறி இருப்பார்? கண்டிப்பாக நான் வந்து பார்ப்பேன் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். இந்த நேரம் ஒரு கேமரா இருந்துருக்க கூடாதா? அவர்  ரியாக்ஷன படம் புடிச்சுருக்கலாமே!". ஆயிரம் எண்ணங்கள் மனதுக்குள்.

அப்போது அவர் வந்தார்.

அவரே தான்! மாஸ்டர்!

அதே ஒல்லி உருவம். முகத்தில் அதே தாடி. அதே அமைதி.

ஓடிச் சென்று, வாய் நிறைய பற்களுடன், "எப்டி இருக்கீங்க மாஸ்டர்?" என்றேன்.

முன்னறிவிப்பின்றி வந்த சத்தத்தில் திரும்பி என்னைப் பார்த்தவர், சற்றே குழப்பத்துடன் "நல்லா இருக்கேன்...." என்று இழுத்தார்.

Of course! How can he recognize me at sight! எட்டு வருடங்களில் 4' 5" இலிருந்து 5' 10" ஆகி இருந்தேன். கம்பளி பூச்சி மீசை வேறு. எடையில் இரட்டிப்பாயிருந்தேன்.

"நாந்தான் சார்... விஸ்வநாத்.. 8 வருஷம் முன்னாடி உங்க கீபோட் ஸ்டுடென்ட்.. அப்புறம் சென்னை போயிட்டேன்.. இப்போ இங்கதான் PSG-ல  சேந்திருக்கேன்"

"......."

"VCV லே-அவுட்ல எங்க வீடு.. அப்பப்போ வந்து சொல்லி குடுப்பீங்களே சார்?"

"......"

"எங்க போனாலும் என்ன கூட்டிட்டு போவீங்க சார்.. செலீனா மிஸ்-க்கு அடி பட்டப்போ போய் பாத்தோமே? உங்க பிரெண்டு பாஸ்டன் வீட்டுக்கும் கூட்டிட்டு போயிருக்கீங்க.."

"......"

"ஹேமாம்பிகா கிளாஸ்-ல தான் நானும் இருந்தேன்".. She was his neice..

"இவ்ளோ ஞாபகம் வெச்சு சொல்றீங்க.. சாரி, எனக்கு சரியா தெரியலீங்களே.." என்றார், ஒரு வித குற்ற உணர்வுடன்.

"......" - இம்முறை, அமைதி காத்தது நான்.

"இன்னும் இன்ஸ்ட்ருமென்ட் ப்ராக்டிஸ் பண்றீங்களா?" - அவர்.

"... ம்ம்ம்.. பண்றேன் சார். ஸ்கூல் மியூசிக் டீம்-ல இருந்தேன்.."

"ஓ.. நல்லது.. நேரம் கெடைக்கும் போது வாங்க.. சேந்து ப்ராக்டிஸ் பண்ணலாம், சார்"..

சார்? சார்?!?!

அமைதியாக தலையாட்டி விட்டு நகர்ந்தேன்.

சற்றே தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர்கள், அருகில் வந்து அமைதியாக என் தோளைத் தட்டிக் கொடுத்தது எனக்கு தெரியவில்லை.

மாற்றத்தின் மறுமுகம்.